Monday, November 11

மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.

மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியிருந்தாதால் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்து குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சாமி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் படத்தைப் பார்த்தபின் அவர்களின் நினைவுக்குறிப்புகளை எழுதி வருகின்றனர். விவாதங்கள் நிகழ்வதே நல்ல கலைப்படைப்புக்கான அடையாளம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சங்களையும் கொண்ட படங்கள் எப்போதாவதுதான் வெளியாகும். மெய்யழகன் அப்படியான சினிமா.
நம் சொந்தங்களை, கலாச்சாரங்களை, வரலாறுகளை மறந்து வாழ்கிறோமே என நினைப்பவர்களுக்கான கதையாக இது இருந்தது. வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கு இப்படம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியும் என நம்பினோம். என்ன சொல்ல முயற்சி செய்தோமோ அதை செய்துவிட்டதாக உணர்கிறோம்.
பிரேம் குமார் சரித்திர கதையொன்றை வைத்திருக்கிறார். அபாரமான கதையாக வந்துகொண்டிருக்கிறது. விரைவில், எழுதி முடிப்பார். ஒரு சரியான காட்சியும் இசையும் அழ வைக்க முடியுமா என மெய்யழகனில் நுணுக்கமாக வேலை வாங்கியிருக்கிறார்.

பிரேம் குமார் எழுதியதைவிட அத்தான் கதாபாத்திரத்தை அர்விந்த் சாமி தன் நடிப்பால் எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இந்த மாதிரி படங்களெல்லாம் திரும்பக் கிடைக்காது. பெருமையாக நினைப்போம் என அண்ணன் (சூர்யா) சொல்லிக்கொண்டே இருப்பார். அண்ணியும் (ஜோதிகா) படத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி கதைகளில் தொடர்ந்து நடிங்க என வாழ்த்தினார்.” எனத் தெரிவித்தார்.