Sunday, July 7

கிளாஸ் மேட்ஸ்- தமிழ் திரைப்பட விமர்சனம்

கிளாஸ் மேட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக அங்கையர் கண்ணன் தயாரிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் கிளாஸ் மேட்ஸ். கார் டிரைவர் ஆக இருக்கும் கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். குடிகாரனாக இருக்கும் கதாநாயகன் தன் மீது அன்பாக இருக்கும், அப்போதுதான் திருமணம் ஆகி இருக்கும் அன்பு மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். தன் மனைவி மீது இருக்கும் சந்தேகத்தின் காரணமாக காரை ஓட்டி செல்லும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் விபத்தில் ஒன்றில் மாட்டிக் கொள்கிறான். அப்போதும் குடியை விடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் அவனும்,அவனது மாமனும், மாமனின் அண்ணனும் காரில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி மாமனின் அண்ணன் இறந்து விடுகிறான். குடித்துவிட்டு காரை ஒட்டி சென்று விபத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக அவன் சிறைக்கு செல்கிறான். கடைசியில் சிறையில் இருந்து வெளியில் வந்தானா…? குடிப்பழக்கத்தை கைவிட்டானா…… என்பதே திரைப்படத்தின் கதை.

கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். முழு நேர குடிகாரர்கள்  என்னவெல்லாம்  செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்! சம்பாதிக்கிற வேலையை மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, குடிக்கிற வேலைய மட்டும் செய்பவராக இயக்குநர் சரவண சக்தி. அவருடைய ஒரே பணி மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பது. குடித்துவிட்டு படுக்கும் பெட்டில் யூரின் போவது மற்றும் பீரோவில் யூரின் போவது எல்லாம் என்ன நகைச்சுவை என்றே தெரியவில்லை.

எந்த நேரமும் போதையில் மிதந்து மனைவியின் ச***** உணர்விற்கு தீனிபோட முடியாத, தன் இயலாமை குறித்து சிந்தித்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் காட்சி சிறப்பு.

கதாநாயகன் அங்கையர் கண்ணனின் மனைவியாகட்டும், குட்டி புலி சரவண சக்தியின் மனைவியாகட்டும் அந்த இரு மனைவிகளும், கணவர் எவ்வளவுதான் குடித்துக் கூத்தடித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அன்பை பொழிவது செயற்கைத்தனமாக இருக்கிறது. அதுவும் குட்டி புலி குடிப்பதற்காக அவருடைய மனைவி செலவிற்கு 500 ரூபாய் பணம் கொடுப்பது…….யப்பா முடியலடா சாமி… அதேபோல் குட்டி புலி சரவண சக்தியின் மச்சானாக வரும் சாம்ஸ், வெளிநாட்டில் இருந்து கிராமத்திற்கு வரும்போதும் கோட் சூட் உடன் வருகிறார். வெளிநாட்டிலிருந்து கிராமத்திற்கு வரும்போது யார் அப்படி கோர்ட் சூட்டுடன் வருகிறார்கள் என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் கிராமத்தில் இருக்கும் போதும் கோர்ட்டு சூட்டுடன் இருக்கிறார்… அவருடைய பெண் பார்க்கும் படலம், மது அருந்துவதால் தடைப்படுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதேபோல மயில்சாமி கேரக்டர், குட்டிப்புலி சரவண சக்திக்கு அண்ணனாக வரும் மயில் சாமிக்கு நடிக்கும்படியாக வாய்ப்பு தரப்படவில்லை. அவர் கடைசியாக டப்பிங் பேசிய படம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அபி நட்சத்திரா அவ்வப்போது மின்னல்போல் எட்டிப் பார்த்துவிட்டு போகிறார்.கிளைமாக்ஸில் ஒரு பெரிய ட்விஸ்ட் அவருக்கு. அதேபோல் குடிகாரர்களை திருத்தும் டாக்டராக வரும் டீ எம் கார்த்திக், அவரே குடிக்கு அடிமையாகுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காமெடியாக இருக்கிறது. படத்தில் நிறைய இடத்தில் லாஜிக் பார்ப்பதை தவிர்த்து விட்டார் இயக்குனர் குட்டி புலி சரவண சக்தி.

அருள்தாஸ், மீனாள் எல்லாம் ஓரிரு சீனோடு சரி. சொல்ல வந்த கருத்து நல்ல கருத்து என்றாலும், அதை சொல்லிய விதம் நம்மை படத்தோடு ஒன்ற விடாமல் செய்கிறது. ஆனாலும் குடியின் தீமையை விளக்கி ஒரு படத்தை எடுத்ததற்காக நாம் பட குழுவினரை தாராளமாக பாராட்டலாம்.

MOVIE REVIEW BY CNNOTV.COM