
*“’சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி*
*“தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்*
*“தமிழர்கள் அல்லாத ஒரு கூட்டம் திரையரங்குகளை வளைத்துக்கொண்டு அடாவடி செய்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் விவகாரம் குறித்து இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்*
*“தமிழர் இன வரலாற்றை ஒரு தமிழன் படமாக எடுத்தால் தியேட்டர் தர மறுக்கிறார்கள்” ; ‘சல்லியர்கள்’ பட இயக்குநர் கிட்டு வேதனை*
CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.
சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு சேது கருணாஸ், அவரது மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
அதேசமயம் இப்படம் இன்று (ஜன-1) வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரையரங்குகளில் இப்படம் வெளியாக முடியாத சூழல் இருக்கிறது என்றும் நேரடியாக இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
‘சல்லியர்கள்’ படத்தின் சிறப்பு காட்சியை பத்திரிகையாளர்களுக்காக திரையிட்டு காட்டிய பின் அவர்களிடம் பேசும்போது தனது இந்த முடிவை அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.
*இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,*
“சல்லியர்கள் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் இந்த படத்தை நானே ரிலீஸ் செய்ய முன் வந்தேன். இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து ரிலீஸ் தேதி அறிவித்து சரியான திரையரங்குகள் கிடைக்காதது உள்ளிட்ட சில காரணங்களால் கேன்சல் செய்து இருக்கிறேன். அடுத்த வாரம் ஜனநாயகன், பராசக்தி படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்த பெரிய படங்களின் ரிலீஸும் இல்லை என்பதால் படத்திந ரிலீஸ் தேதியை ஜன-1ஆம் தேதி அறிவித்தோம், ஆனால் இப்போது வருத்தமான செய்தி என்னவென்றால் நாளை இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டு வர முடியவில்லை.
காரணம் எங்களுக்கு வெறும் 27 தியேட்டர்கள் மட்டுமே சல்லியர்கள் படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். அதாவது தமிழ்நாடு முழுவதும் தினசரி 27 காட்சிகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். சிறிய படங்களுக்கு இந்த அளவுக்குத் தான் திரையரங்குகள் கொடுக்க முடியும் என்று காரணம் சொல்கிறார்கள், அதிலும் பிவிஆர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு திரையரங்கில் கூட இந்த படத்தை திரையிட மறுத்து விட்டார்கள். வெளியூரில் இருந்து நம்ம ஊருக்கு வந்து வியாபாரம் செய்யும் அவர்கள் நம் மண் சார்ந்த படத்தை வெளியிடுவதற்கு முடியாது என்கிறார்கள். இதுவே கர்நாடக மாநிலத்தில் இப்படி அவர்கள் கூறியிருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நம்முடைய பெருந்தன்மையை இவர்கள் முட்டாள்தனமாக நினைக்கிறார்கள்.
அதனால் தியேட்டர்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த படம் வெகுஜன மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக நாளை நேரடியாக ஓடிடி தளத்திலேயே இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இங்கே தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் கோடிக்கணக்கில் காசைக் கொண்டு வந்து வாக்குகளை பெற்று தலைவர், செயலாளராக ஆகிறார்களே தவிர, இதுவரை தயாரிப்பாளர்களுக்காக யாரும் எதுவும் செய்யவில்லை, அதே சமயம் 2013ல் கருணாஸ் நடிப்பில் வெளியான ரகளைபுரம் படத்துடன் கருணாஸுக்கு ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கிறது என்பதை காரணம் காட்டி, இன்று மாலை அது தொடர்பாக விநியோகஸ்தர் குமார் என்பவர் எனக்கு போன் செய்து அந்தப் பிரச்சினைக்கான பணத்தை செட்டில் செய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இந்த படத்தை நான் வெளியிடுவதாக அறிவித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போதே அவர்கள் எங்களை அழைத்து இந்த விஷயத்தை பேசி முடித்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் பிரச்சினை பண்ண வேண்டுமென்று இப்படி செய்கிறார்கள். இத்தனைக்கும் கருணாஸ் அந்த பணத்தை செட்டில் செய்து விட்டார். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக கோவையிலேயே சல்லியர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். இதுவே நாங்கள் தியேட்டர்களுக்கு படம் கொடுத்தால் 90 நாள் கழித்து எங்களுக்கு பணத்தை கொடுக்கிறார்கள். அவர்கள் கடனுக்கா படத்தை திரையிடுகிறார்கள் ? காசை வாங்கிக்கொண்டு தானே டிக்கெட் கொடுக்கிறார்கள் ? ஏன் ஒரு வாரத்திலேயே எங்களுக்கு பணத்தை கொடுப்பதற்கு என்ன ? நாங்கள் வட்டிக்கு வாங்கி பணம் எடுப்போம். ஆனால் அவர்கள் 90 நாட்கள் அந்த பணத்தை தங்கள் வசம் வைத்துக் கொள்வது என்ன நியாயம் ? சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் ? பெரிய நடிகர்களின் வெறும் 12 படங்களை மட்டும் வைத்து வருடம் முழுதும் திரையரங்குகளை ஓட்டிவிட முடியுமா ?
இன்று பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்தீர்கள். ஒரு காட்சி கொடுப்பதற்கு கூட தகுதி இல்லாத படமா இது ? நான் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டுக் கொள்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் இந்த சங்கங்கள் பதில் சொல்லியாக வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது. 2013ல் தரவேண்டிய பணத்தை இப்போது கேட்டு பெறுவதில் விநியோகஸ்தர் சங்கத்திற்கு தில் இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளரின் நலனை காக்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு அந்த திராணி இல்லை.. இதில் தயாரிப்பாளர்களுக்கு என எத்தனை சங்கங்கள் தனித்தனியாக இருக்கின்றன. இந்த சங்கங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு என்ன நல்லது நடந்தது ? ஒன்றுமில்லை. அப்படி என்றால் இந்த சங்கங்களால் என்ன பிரயோஜனம் ? எங்களுக்கு திரையரங்குகள் தர மறுத்த பிவிஆர் நிறுவனத்திற்கும் மற்ற திரையரங்குகளுக்கும் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தின் இயக்குநர், படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த நடிகை சத்யா தேவி இவர்களது வயிற்றெரிச்சல், பாவம் உங்களை சும்மா விடாது. சின்ன படங்களை நாங்கள் திரையிட மாட்டோம் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் அதன்பிறகு வேறு யாரும் சின்ன படமே எடுக்க போவதில்லை. அதையாவது சொல்லி விடுங்கள்.
என்னுடைய வணங்கான் படம் ரிலீஸின் போதும் எனக்கு இது போன்ற பிரச்சனைகள் நடந்தது. எனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை எல்லாம் என் முன் கொண்டுவந்து வைத்து பஞ்சாயத்து பண்ணினார்கள். ஒருவருக்கு பணம் செட்டில் செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே அந்த பிரச்சனை பற்றி பேச வேண்டியதுதானே ? ரிலீஸுக்கு முதல் நாள் பேசுவது என்பது எந்த விதத்தில் நியாயம் ? அப்படி என்றால் உங்கள் அதிகாரத்தை காட்ட நினைக்கிறீர்கள். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும் ? அப்படியே காலம் போய்விடுமா ?
ஒரு படத்தை திரையிட்டு விட்டு அது ஓடவில்லை என்றால் தியேட்டரில் இருந்து தூக்குங்கள். ஆனால் காட்சிகளே தர மாட்டோம் என்றால் எந்த விதத்தில் நியாயம் ? புது ஆட்களின் படங்களுக்கு திரையரங்குகள் தரமாட்டோம் என்று சொன்னால் எப்படி புது ஆட்கள் திரை உலகில் உருவாவார்கள் ? என்னுடைய பேனரில் வெளியானால் நல்ல படம் என்கிற ஒரு பெயர் இருக்கிறது. தப்பான படத்தை நான் இதுவரை கொடுத்திருக்கிறேனா ? இந்த பிரச்சனை குறித்து பேசி தீர்ப்பதற்கு திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அனைவரும் அமர்ந்து பேசுவோம் என்று அடிக்கடி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் இங்குள்ளவர்களிடம் ஒற்றுமை இல்லை.
சமீபத்தில் கூட அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு நடந்தபோது தயாரிப்பாளர் முரளி ராமசாமி அந்த சந்திப்பை கேன்சல் செய்தார். ஆனால் தயாரிப்பாளர்கள் இது பற்றி பேசுவதில்லை. காலப்போக்கில் அவர்கள் ஓட்டு போடும் உறுப்பினர்களாக மாறி சினிமாவை விட்டு ஒதுங்கி சென்று விடுகிறார்கள். ஓட்டு போடும் நேரத்தில் தான் இவர்கள் அவர்களை தேடி செல்கிறார்கள். நானும் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு வகித்து சில விஷயங்களுக்காக போராடினேன். ஆனால் அங்குள்ள தயாரிப்பாளர் தனஞ்செயனே அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார். அதனால் தான் அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியே வந்தேன்..
நான் தமிழ் தேசியம் பேசுபவன்.. என்றாலும் எங்கேயாவது அரசியல் பேசி இருக்கிறேனா ? சினிமாவை சினிமாவாக பார்க்கிறேன். எங்களை அந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விடாதீர்கள். எங்களை கடைசி வரை நீங்கள் தயாரிப்பாளர்களாகவே பார்க்க ஆசைப்படுகிறோம். எங்களை வேறு மாதிரி மாற்றி விடாதீர்கள். இவங்களெல்லாம் பிரிந்து இருக்கும் வரை தான் உங்கள் ஆட்டம் நடக்கும். இன்று சல்லியர்கள் படத்திற்கு நடந்தது மிகப்பெரிய அராஜகம். கொடுமை… இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில் ஒரு படத்திற்கு 27 தியேட்டர்கள் கொடுக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ? சென்னையில் 170 ஸ்கிரீன்கள் வைத்திருக்கிற பிவிஆர் ஒரு ஷோ கூட கொடுக்கவில்லை. எங்கிருந்தோ வந்து இங்குள்ள பொருளாதாரத்தை சுரண்டுகிறார்கள். ஒரு படத்தை ஓடாது என்று தீர்மானிக்க நீங்கள் யார் ? நீங்களும் வியாபாரி.. நானும் வியாபாரி.. படத்தை ஓட்டுவதற்கு முதலில் இடம் கொடுங்கள். ஓடுகிறதா ஓடவில்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். அதன் பிறகு ஓடவில்லை என்றால் படத்தை தூக்குங்கள்.. ஓடாது என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க நீங்கள் யார் ? முன்பு நீங்கள் திரையிட்ட படங்கள் எல்லாமே ஓடிவிட்டனவா ? திருப்பூர் சுப்பிரமணியம் போன்ற தியேட்டர் முதலாளிகளிடம் போன் அடித்தால் உடனே எடுத்து பேச முடியும். ஆனால் பிவிஆர் போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதால் தானே புறக்கணிக்கிறார்கள்” என்று பேசினார்.
*இயக்குநர் வ. கௌதமன் பேசும்போது,*
“இந்த சல்லியர்கள் படம் தமிழ் ஈழத்தில் வீரம் செறிந்த போர்க்களத்தில் எதிரிக்குக் கூட இரக்கம் காட்டும் கருணையான மருத்துவர்களின் உலகம் பற்றி பேசுகிறது. அப்படி தமிழர்களின் மாண்பு பற்றி பேசுகிற இந்த படத்திற்கு, இங்கே தமிழர்கள் அல்லாத ஒரு கூட்டம் திரையரங்குகளை வளைத்துக்கொண்டு உங்களுக்கு திரையரங்குகள் தரமாட்டோம் என்று சொல்கிறார்கள். அப்படி சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தராத இந்த சங்கங்கள் தான் இங்கே இருந்து முதலில் அகற்றப்பட வேண்டும். இந்த அரசாங்கம் கருணை அற்று நடக்கிறது. ஒரு படம் போடக்கூடாது என்று முடிவு செய்துவிட்டால் அந்த படத்திற்கு காலை 10 மணி அல்லது இரவு 10 மணி காட்சி தருகிறார்கள். அப்படி என்றால் யார் வந்து பார்ப்பார்கள் ? ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு நல்ல காட்சிகளை கொடுங்கள். மக்களிடம் ஓட விடுங்கள். அதற்கு பிறகு அவர்கள் வரவில்லை என்றால் படத்தை தூக்குங்கள். இங்கே எண்ணற்ற கட்சிகள் இருக்கின்றன. எப்படி சங்கங்கள் எல்லாம் தங்களது கடமையை மறந்து சுத்தமாக தூக்கி எறிந்து விட்டு நேர்மையற்று அறமற்று நடக்கின்றனவோ அதுபோல நாங்கள் தான் தமிழர் என்று சொல்லிக் கொண்டு யார் யாரெல்லாம் கட்சி ஆரம்பித்து ஓட்டு வாங்கி கோட்டைக்குச் சென்று பாராளுமன்றத்திற்கு போய் நிற்கிறீர்களோ உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. நீங்கள் எல்லாம் மானமுள்ள தமிழர் என்றால் சல்லியர்கள் என்கிற மருத்துவர்கள் அர்ப்பணிப்பு குறித்த படத்தை எடுத்து அதை தமிழ்நாட்டில் திரையிட முடியவில்லை என்றால் இங்கே ஆளுகின்ற அரசாங்கத்திற்கே அது இழிவான செயல். இங்கே இருக்கிற சங்கங்களுக்கும் அது இழிவான செயல்.. எல்லாவற்றையும் விட இந்த இனத்தை காப்பாற்றுகிறோம், தமிழர்களின் உரிமையை காப்பாற்றுகிறோம் என்று கட்சி ஆரம்பித்தார்களே அவர்கள் எல்லோரும் இந்த சல்லியர்கள் திரைப்படம் நாளை பிவிஆர் திரையரங்குகளில் ஓடவில்லை என்றால் இனி 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கேட்டு வராதீர்கள்” என்று பேசினார்..

*படத்தின் இயக்குநர் கிட்டு பேசும்போது,*
“இங்கே தமிழர் இன வரலாற்றை ஒரு தமிழன் எடுத்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகத்தான் நேரிடும். அதுவே தமிழர் அல்லாதவர் தமிழர் வரலாற்றை தப்பாக எடுத்து அதை ரொம்ப சுலபமாக திரைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பொன்னியின் செல்வன் நமது வரலாறு கிடையாது. புனைவு கதை. ஆனால் அதை இரண்டு பாகங்களாக எடுத்து எத்தனையோ கோடி சம்பாதித்து விட்டார்கள். இன்றைய இளைய தலைமுறை இதுதான் நமது வரலாறு என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய வரலாறும் சரி, வலிகளும் சரி இங்கே பதியப்படவில்லை. எந்த ஓடிடி தளத்திலும் தமிழர் வரலாறு குறித்த படங்கள் என்று தேடினால் ஒன்று கூட வராது. ஆனால் நமக்கு எதிரான அனைத்து படங்களும் அங்கே இருக்கும். இத்தனைக்கும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது. ஆனால் திரையரங்குகள் தர மறுக்கிறார்கள். இதற்கான ஒரு தீர்வை தயாரிப்பாளர் சங்கம் அல்லது இயக்குனர் சங்கம் மூலமாக கண்டிப்பாக எடுக்க வேண்டும். இது என்னுடைய ஆதங்கம்” என்று கூறினார்.